நமது மாணவர்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தி அளிக்கும் உன்னத மனிதராக விளங்கும் டாக்டர் அப்துல் கலாம் வழங்கும் கட்டுரை இதோ...
ஆழ்ந்து கற்றல் படைப்பாற்றலைத் தரும்
படைப்பாற்றல் எண்ணங்களை வளர்க்கும்
எண்ணங்களில் இருந்து அறிவு பிறக்கும்
அறிவு உயர நம் வளம் பெருகும் நாடு உயரும்...
லட்சிய சிகரத்தை நோக்கி போக வேண்டிய முயற்சியில் அறிவுப் புதையல் அடைவது ஓர் பெரிய பணியாகும். லட்சியத்தையும் அறிவுப் புதையலையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது, அமைதியான வாழ்வுக்காகவும் உழைக்க வேண்டும். முயற்சிக்க வேண்டும்.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் முன்னேறும் போது, நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பிரச்னைகளை துணிவாக எதிர்கொண்டு அவற்றை முறியடித்து முன்னேற வேண்டும். குறிக்கோளை அடைவதில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதுபோன்று முயற்சி செய்தால் அதில் வெற்றி பெறுவது உறுதி.
டில்லி தமிழ் சங்கத்தில் நான் உரையாற்றியது என் நினைவுக்கு வருகிறது. கவிஞர்களே, பாரதியாரைப் போல் கனவு நிறைவாகப் பாடுங்கள்.
அடிமைத்தளையில் துவண்டு இருந்தபோதே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று பாரதியார் பாடினார். அதைப் போல் நதிகள் இணைந்து நாடெங்கும் வளம் கொழிப்பதாக பாடுங்கள். நாடு வளர்ந்த நாடாகி வாழ்வாங்கு வாழ்வதாக பாடுங்கள். அது குறிக்கோளுக்கு உழைக்க உற்சாகமும் உத்வேகமும் கொடுக்கும்.
கிராமங்களில் இருக்கிற இருந்த ஊரணிகளுக்கு நாம் உயிர் கொடுக்க வேண்டும். புதிய ஊரணிகளை ஏற்படுத்த வேண்டும். அவற்றின் தண்ணீர் பாதைகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். ஊரணிகளை காப்பாற்றினால்தான் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடாமல் இருக்க உதவும். மழைநீர் சேகரிப்பதும் நல்ல பணி.
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நிறைவேற்றுவதன் மூலமும் உபயோகித்த தண்ணீரை விஞ்ஞான முறையில் சுத்திகரிப்பு செய்து திரும்பவும் உபயோகிக்கும் முறைகளாலும் நீடித்து நிலைக்கக் கூடிய கிராமப்புற பொருளாதாரம் பெருகும்.
பஞ்சாப் மாநிலத்தில் நான் சுற்றுப்பயணம் சென்ற போது, அங்கு மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் கிராமத்துக்கு சென்றிருந்தேன். அந்த கிராமத்திற்கு கட்கார் கலான் என்பது பெயர். அங்கு கில் என்பவரை சந்தித்தேன். அவர் தனது கிராமத்திற்கு ஒரு அருமையான திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளார். அங்கு அந்த கிராமத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீரையெல்லாம் சேகரித்து, சுத்தப்படுத்தி மறுபடியும் அந்த கிராம மக்களே தங்களது தோட்டங்களில் உபயோகப்படுத்தும் வகையில் ஒரு அருமையான திட்டம் அங்கு நடைமுறையில் உள்ளது. அதுபோன்ற உபயோகமான திட்டங்கள் இங்கும் நடைமுறைக்கு வர வேண்டும்.
அங்கு மற்றொரு நல்ல காரியமும் நடக்கிறது. பாபா பல்பீர்சிங் சீச்சேவால் எனும் சீக்கிய துறவி, காலிபெயின் புண்ணிய நதியை அது ஓடுகிற வழியெங்கும் மக்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சுத்தப்படுத்தி வருகிறார். இதை இறைப்பணியாக அவர் கருதுகிறார்.
கிராம மக்கள் வாழ்வு வளம் பெறவும் வேலை வாய்ப்புகள் உயரவும், அவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெறவும் வழிபிறக்கும். இப்படிப்பட்ட பொருளாதார வளர்ச்சி கிராமங்களில் ஏற்பட்டால் அங்கு பல்வேறு சமுதாய மக்களிடம் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் மறையும்.
தானியங்களை அப்படியே விற்காமல் உணவுப் பொருட்களாக பதப்படுத்தி விற்பதன் மூலம், பத்து மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்த
பதப்படுத்தும் அமைப்புகளை பஞ்சாயத்து அமைப்புகள் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து முயற்சி செய்யலாம்.
ஒரு நாடு நல்ல வளமான நாடாக கருதப்பட வேண்டுமானால், அந்நாட்டில் நோயின்மை, செல்வசெழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும் சுமூகமான சமுதாயச் சூழலும் வலிமையான பாதுகாப்பும் அந்நாட்டில் நிலவ வேண்டும். இதையே திருவள்ளுவரும் தனது குறளில் வலியுறுத்துகிறார்.
மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
- டாக்டர் அப்துல் கலாம்.
நன்றி - கல்வி மலர்
No comments:
Post a Comment