KILIYANUR ONLINE

Wednesday 7 September 2011

மனைவியை புரிந்து கொண்டாலே

மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி


சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள்
புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து


இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா
பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
சொல்லொண்ணாப் பொறுமையை நெகிழ்ந்து யோசி
சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி


“கவியன்பன்” கலாம், அதிராம்படினம்

யாப்பிலக்கணம்: காய், காய், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும்
எண்சீர் கழிநெடிலடி விருத்தம்

No comments:

Followers