KILIYANUR ONLINE

Tuesday, 27 September 2011

தமிழகத்திலும் வரட்டும் தடை

காசு வேண்டாம் என்று சொல்கிறவர்கள் யாராவது உண்டா? அரசோ, அரசியல் கட்சிகளோ, வர்த்தக நிறுவனங்களோ, தனிமனிதர்களோ, இந்தக் காலத்தில் உண்டா?

இருக்கிறார்கள். இங்கல்ல கேரளத்தில்.

கடந்த ஆண்டு 5 ,539 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு 6 , 730 கோடியாக அதிகரித்ததைக் கண்டு கவலையில் ஆழ்ந்த கேரளா அரசு, அதைக் குறைக்க சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது.

மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, மது அருந்தும் இடங்களின் வேலை நேரத்தைக் குறைப்பது, ஒருவர் மூன்று லிட்டர் அளவிற்குச் சாராயம் வைத்துக் கொள்ளலாம் என்ற வரம்பை ஒன்றரை லிட்டராகக் குறைப்பது எனச் சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது.

அந்த நடவடிக்கைகளில் முக்கியமானது 21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மது விற்க முடியாது என்ற தடை. முன்னாள் இது 18 வயதாக இருந்தது.

இதே போல ஜூன் மாதம் மகாராஷ்டிர அரசும் 25 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. தில்லியும் பஞ்சாப்பும் ஏற்கெனவே குடிப்பதற்கு குறைந்த பட்சம் 25 வயதாகி இருக்க வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் குடிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21 . இதை மற்ற மாநிலங்களைப் போல 25 என உயர்த்தி அரசு அறிவிக்க வேண்டும்.

18 வயதில் ஓட்டு போடலாம், 21 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் குடிப்பதற்கு மட்டும் 25 வயதா என பாலிவுட் நட்சத்திரங்கள் கேள்வி எழுப்பினார்கள். அதையடுத்து ஓர் ஆங்கில நாளிதழும் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது.

ஓட்டுப் போடுவது என்பது உரிமை. திருமணம் என்பது ஒரு கலாசார வழக்கம். ஆனால் குடிப்பது என்பது ஒரு சமூகப் பிரச்சினை.

சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுவதற்கும் மதுப்பழக்கமே காரணமாக இருந்து வருகிறது. இவற்றைத் தவிர குடும்பம் சீர் குலைகிறது. பெண்கள் வன்முறைக்குள்ளாகிரார்கள். உடல் நலம் கெடுகிறது. அதன் மூலம் நாட்டின் உற்பத்தித் திறன் குறைகிறது. தனிநபரின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் இலவசங்களைக் கொடுத்து வாக்குகளைக் கவர்வதற்காக தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை நடத்துகிறது.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இளைஞர்கள். அதிலும் பத்திலிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் 35 கோடி பேர். இதுதான் இந்தியாவின் வலிமை. இந்த இந்தியா இளம் வயதிலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உடனடியாக தமிழகத்தில் மது அருந்துவதற்கான வயது அதிகரிக்கப் பட வேண்டும்.

- நன்றி புதிய தலைமுறை

No comments:

Followers