மின்தடையால் நான்கு வருடங்களாகத் தவித்துக்
கொண்டிருக்கும் அதே தமிழகம் மின்சார உற்பத்திக்காக
கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள
கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்துக்
குரல் கொடுக்கிறது.
மின்விசிறி, மின்விளக்கின் பயனை கடந்த 60/70
ஆண்டுகளில் துய்த்திருக்கும் தமிழகம், அதனை
உற்பத்தி செய்யும் விதங்களைத் தற்போது
ஊன்றிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது என்பது
மிக நல்ல மாற்றம்.
பொறியியல், அறிவியல் வயப்பட்ட தமிழகம்
அதில் தனது வாழ்வாதாரங்களையும், தனது
சந்ததிகளையும் தொலைக்கக் கூடிய ஒன்றை,
அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத் தயாராகியிருப்பது மிக நல்ல
மாற்றம்.
1986ல் உருசியாவின் செர்னோபில் அணு உலை
வெடித்து பேரழிவை ஏற்படுத்திய ஆகப்பெரிய
அறிவியலைக் கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்தாலும்,
அவசர அவசரமாக 1988ல், அதே உருசியாவிடம்
சென்று கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக்
கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது.
அதுவும் 4% வட்டி கட்டுகிறோம், இரண்டரை பில்லியன்
வெள்ளி கடனுக்கு அதைக் கொடுங்கள் என்று
ஒரு கடன்கார ஒப்பந்தம் போட்டது இந்தியா.
அன்றைய நிலையில், உருசியாவுடன் இவ்வளவு பெரிய
ஒப்பந்தங்களைக் கண்ட அமெரிக்காவிற்குக்
கண்கள் சிவக்காமல் இருந்திருக்குமா? என்பது தனிக்கதை.
1986ல் வெடித்த உருசிய அணு உலை, உடனடியாகவும்,
கதிரியக்கத்தால் ஏற்பட்ட பல படு பயங்கர நோய்களாலும்,
1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் கொன்றுள்ளது.
http://www.redfortyeight.com/2011/05/01/chernobyl-death-toll/
http://richardbrenneman.wordpress.com/2011/03/25/the-chernobyl-death-toll-1000000-not-4000/
இன்னும் செர்னோபில் அணு உலையால் தொடர்ந்து
கொண்டிருக்கும் சாவுகளையும், எதிர்காலத்தில்
தொடரக்கூடிய சாவுகளையும் கணக்கிடும் அறிஞர்களின்
கூற்றுகள் நடுங்க வைக்கின்றன.
அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும்,
"செர்னோபில் அணு உலையில் இருந்த குறைபாடுகளைக்
கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு
ஏற்படாதவாறு செய்யப்பட்டு விட்டது" என்று சொல்வது,
"கூடங்குளம் அணு உலை ஒருவேளை வெடித்துச் சிதறினால்,
அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன்பின்
கட்டப்படும் அணு உலைகளைச் சரி செய்துவிடுவோம்"
என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்ளமுடிகிறதே தவிர
பெரிதாக அணு உலை நுட்பத்தின்பால் பற்று
ஏற்படுத்துவதாக இல்லை.
"எந்த ஆலையானாலும், எந்திரங்களானாலும்
ஆபத்துகள் நிறைந்தே இருக்கின்றன - அதற்காக
நாம் அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -
என்று சில அரசியல், அறிவியல் துறைகள்
பரப்புரை செய்தாலும், "ஒரு தடவை வெடித்தால் -
நூறு தலைமுறை சாவும்" என்ற உண்மையை
செர்னோபில் நிறுவியிருக்கையில்,
தமிழகத்தில் அணு உலை தேவையா என்று
எண்ணிப் பார்க்க வேண்டியது மனிதசாதியின்
கடமை அல்லவா?
"கட்டத் தொடங்கும் போது என்ன செய்தீர்கள்? -
இப்பொழுது வந்து எதிர்க்கிறீர்களே" என்று
கேட்கும் அரசியல் பீடங்களும், அறிவியல் பீடங்களும்
ஒன்றை எண்ணிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.
"கற்றலும் பட்டறிவு என்பதும் வாழ்வியலின்
தொடர் கல்வி" என்பதை அவர்கள் தங்கள்
வசதிக்காக மறந்து விடுகிறார்கள். தாங்கள்
செய்ததை ஞாயம் என்று நிறுவ இயற்கையையும்
சந்ததிகளையும் காவு கொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள்.
நாசகார அறிவியலோடு அரசியலும் சேர்ந்து
கொள்ளும்போது அது மாபெரும் அழிவு
சக்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதன் பற்கள்
நீண்டு வெளியே தெரிகின்றன.
இந்தச் சக்தியை கேள்வி கேட்க சாதாரண
மக்களுக்கு எந்தநாளும் துணிவு ஏற்படுவதில்லை
தமிழகத்தில்.
அரசியல்வாதிகளே, அறிவியல் அறிஞர்களே,
"எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்
காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே
விதைக்கும் முன்னர், எம்மை
ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"
"இது இன்னது இது இத்தன்மையது
என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்
கட்டினீர்களா?"
"நாங்களாகக் கற்ற கல்வி! எங்கள் கல்வி
உலகில் நடந்த பேரழிவுகளை அலசிப்
பார்க்கச் செய்திருக்கிறது". அதன்
அடிப்படையிலேதான் இந்த அணு உலைகளை
மறுக்கிறோம் - என்று கூடங்குளத்திலே
மக்கள் எழுந்து, நாசகார அறிவியலின்
முகத்திலே கரிபூச நிற்பதிலே ஒரு
பெரிய அறிவு எழுச்சியை காணமுடிகிறது.
ஆனால், அரசும் அறிவியலும் தமது
கல்வியால் ஆணவத்தையே பெற்றிருக்கின்றன.
அந்த ஆணவத்தை கோடிக் கணக்கான
மக்கள் முன்னர் கொடியேற்றி வைக்கின்றனர்.
1988லே துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை
இன்றைக்கு 23 ஆண்டுகளாகி பல்லயிரம் கோடிகளை
ஏப்பமிட்டுள்ளது. அரணவ இரகசியங்கள் போல,
இதன் செலவுகள் வெளியே சொல்லப்படுவதில்லை.
2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே
17,000 கோடி உரூவாய்.
உருசியாவின் நட்பிற்கு விலை கூடங்குளம்.
அமெரிக்காவின் நட்பிற்கு அதைப்போல
20 உலைகளுக்கான ஒப்பந்தங்களை
இந்தியா போட்டிருக்கிறது. நீண்ட காலம் எடுக்கும்
அணு உலைத் திட்டங்களுக்கு நீண்ட கால நோக்கில்
போடப்பட்டிருக்கும் பொக்கீடு (budget)
20 இலட்சம் கோடிகள். இவ்வளவிற்கும் பின்னர்
இதன் உழைப்பு காலம் வெறும் 25 ஆண்டுகள்தான்.
அதாவது, இன்றைய கூடங்குளத்திலே 2000 மெகாவாட்
மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள்
20 இலட்சம் கோடிகள், 20,000 மெகாவாட்டிற்கு
திட்டமிடப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட்
மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகள்
திட்டமிடப்பட்டிருக்கிறது.
அறிவியல் அறிஞர்கள் சிலர், அணு உலையை
மறுப்பவர்களை "சாணியுகத்துக் காரர்கள்" என்று
சொல்கிறார்கள். அந்தச் சாணியைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எளிய
முறையை கிராமந் தோறும் நிறுவினால்
பல இலட்சம் கோடிகள் தேவையே இல்லை.
தமிழகத்திலே 17,000 கிராமங்கள் இருப்பதாகப்
புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும்
தேவையான அடிப்படை மின்சாரத்தை 20-30 கோடி உரூவாய்
செலவில் செய்துவிட முடியும். அதாவது இரண்டு
2ஞீ அலைக்கற்றைப் பணத்திலேயே மிக எளிதாகச்
செய்ய முடிந்த ஒன்று.
கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு
வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்களாம்
அப்போது. ஆனால், இது வரைக்கும் பத்தே பத்து
பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில்
வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகிக்கும் உதயகுமார் சொல்கிறார்.
அதுவும் உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டும்
என்று வேண்டுகோளோடு வந்த விளம்பரமாம்!
சாணியுகம் என்று தாழ்வாகக் கருதக் கூடாது.
அந்தச் சாணியை வைத்து கிராமந்தோறும்
மின்சாரம் தயாரித்தால் பல்லாயிரக்கணக்கான
பேருக்கு உண்மையிலேயே வேலை கிடைக்கும்
என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
அணு உலைகளுக்கு ஆபத்து தானாகவும் வரும்;
இயற்கையின் சீற்றத்தாலும் வரும். அதாவது,
ஆபத்து வரும் என்றால் அது எப்படி வேண்டுமானாலும்
வரும் என்பதுதான் அணு உலைகளின் நிலையாமை.
உருசியாவின் செர்னோபில் விபத்து தானாக வந்தது.
சப்பானின் புகுசிமா விபத்து இயற்கை சீற்றத்தால் வந்தது.
"தானாக வந்த விபத்தா?
இப்போது சரி செய்து விட்டோம்!
பூகம்பத்தால் விபத்து வருமா?
இந்தப் பக்கம் பூகம்பமே வராதுங்க! "
இப்படித்தான் சொல்கிறார்கள் கூடங்குள உலை
ஆதரவாளர்கள்.
அணுத்துறையில் இந்தியாவிலும் கனடாவிலும்
பல்லாண்டு காலம் பணிபுரிந்த முதிர்ந்த தமிழ்
அறிஞர் திரு.சி.செயபாரதன் அவர்கள்
கூடங்குளம் உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
குறிப்பிடுகையில் அது கடல்மட்டத்தில் இருந்து 25 அடி
உயரத்தில் முன்னேற்பாடாகச் செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்கிறார்.
http://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety/
இது பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், சப்பானில்
அண்மையில் வந்த பேரலை 50 அடி உயரத்திற்கு
எழுந்தது. 3 மீட்டரில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை
பொதுவாக சுனாமி அலைகள் எழும். ஆனால்,
சப்பான் அலை 14 மீட்டர் (50 அடி) உயர்ந்தது.
இதைவிட, சப்பானில் 1993ல் ஒக்கைடோவில்
அடித்த சுனாமிப் பேரலையின் உயரமான அலை
32 மீட்டர் (100 அடி) எழுந்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளில்
ஆகப் பெரியது அலாசுகாவில் 1958ல் நிகழ்ந்தது.
அதன் உயரம் 524 மீட்டர் (1720 அடி) என
பதிவாகியிருக்கிறது.
http://geology.com/records/biggest-tsunami.shtml
இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் பேரலைகளின்
உயரத்தை முன்கூட்டி அளந்துவிட முடியாது. வந்தபின்
அளப்பதைத்தான் அறிவியல் செய்துவருகிறது.
அவ்வளவு ஏன்?
2004 சுனாமி பேரலைகளால் தமிழகமும் தமிழீமும்
பேரழிவைச் சந்தித்தன. அப்போது தமிழர் கடற்கரைகளில்
எழுந்த அலைகளின் உயரம் 10.4 மீட்டர் (35அடி).
அதன்பின்னர் கடற்கரைகள் அப்படியேதான் இருக்கின்றன.
மூழ்கிவிடவில்லை.
ஆனால், தமிழக வரலாற்றில்
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று சிலப்பதிகாரம் சொல்லவில்லையா?
சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்
விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?
சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய
பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி இழக்கவில்லையா?
மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை நாம் கண்டு
கொன்டுதானே இருக்கிறோம்?
கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்
மூழ்கிப் போகவில்லையா?
1970களில் தனுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை
மறந்துவிட்டோமா?
இப்படித் தமிழகத்தின் கடலோரம் இயற்கைச் சீற்றத்தினால்
குறுகிப் போய்க் கொண்டிருப்பதை வரலாற்றிலும்,
நம் காலத்திலும் கண்டிருந்தும், போன நூற்றாண்டில்
1720 அடி உயர சுனாமி அலையை அலாசுகாவில்
பார்த்திருந்தும், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியின்
கொடுமையை நாம் பட்டிருந்தும், வெறும் 25 அடி உயரத்தில்,
கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம்
உலை பாதுகாப்பற்றது என்று மறுப்பதில்
தமிழ் மக்களிடம் என்ன குறையை யார் காண முடியும்?
அணு அறிஞர் செயபாரதன் கூறுவது போல, சில
பாதுகாப்புக் கருவிகளை கூடங்குள உலையில்
நிறுவியிருக்கலாம். ஆனால், கால காலமாக
கடற்கரையை மூழ்கடிக்கும் அலைகளைப் பார்த்து
வரும் தமிழகத்தின் முன் இந்த அணு உலைகள்,
"நிறுவப்பட்டிருக்கும் அணுகுண்டாகத்" தெரிவதில்
வியப்பென்ன?
மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும்
சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்
தற்போது நிறுவத்தில் இருக்கும் 7 உலைகளை
தற்காலிகமாகவேனும் நிறுத்தியிருக்கிறது. உலகில்
பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை
மீளாய்வுக்கு உட்படுத்துகின்றனர்.
அணுத்துறை அறிஞராக சி.செயபாரதன்,
அணு உலையை ஆதரித்தாலும், அவருக்கும் இருக்கும்
அச்சத்தினால்தான் அவர் அணு உலைகளை
"நாட்டுக்குத் தேவையான தீங்குகள்" என்று வருணிக்கிறார்.
அவருக்கும் கூடங்குள மறுப்பாளர்களுக்கும் இருக்கின்ற
ஒரே வேறுபாடு "நாட்டுக்குத் தேவையற்ற தீங்கு" என்பது
மறுப்பாளர் கருத்தாகவும், "நாட்டுக்குத் தேவையான தீங்கு"
என்பது அணு அறிஞர் செயபாரதனொடு அவரைப் போன்ற
ஆதரவாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
ஆக, யாருமே இதனை "நல்லது" என்று சொல்லவில்லை.
மாறாக "தீங்கு" என்றே சொல்கிறார்கள்.
அமெரிக்காவில், 104 உலைகள் உள்ளன. 77% அமெரிக்க மக்கள்
1977ல் அணு உலை ஆதரவாளராக இருந்துள்ளனர் என்றும்
திரிமைல் விபத்து, செர்னோபில் விபத்து, புகுசிமா விபத்து
ஆகியவற்றிற்குப் பின்னர் அமெரிக்கர்களின் அணு உலை
ஆதரவு என்பது மிகக் குறைந்து 43% ஆகி விட்டது
என்று திரு.செயபாரதன் கூறுவது கவனிக்கத் தக்கது.
http://jayabarathan.wordpress.com/2011/10/18/nuclear-power-status-2011/
அது மட்டுமல்ல, அணு உலைகளையும் அணுவியலையும்
முழுமையாக ஆதரிக்கும் செயபாரதன் அவர்களே,
"இந்த அணு உலைகள் பூமிக்கடியிலே, பாதாளத்திலேதான்
கட்டப்படவேண்டும்; அதுவே சிறந்த பாதுகாப்பு" என்று
கூறுகிறார்.
http://jayabarathan.wordpress.com/2011/10/05/world-nuclear-power-status/
"கரணம் தப்பினால் மரணம்" என்ற அறிவியலின்
அணு உலைகளை தமிழத்தில் அமைப்பதை
முழுமையாக நிறுத்த வேண்டும்.
நமது கடற்கரைகள் வரலாற்றுக் காலந்தொட்டு
பேரலைகளுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும்
உட்பட்ட பகுதியாகும்.
இதை மறுத்து செய்யப்படும் கூடங்குள முயற்சி
தமிழ் மக்களின் வாழ்வுக்குப் பொருத்தப்படும்
"2000 மெகாவாட் அணுகுண்டன்றி வேறல்ல".
1977ல் அணு உலைகளை ஆதரித்த அமெரிக்கர்கள்
இன்று அதனைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.
1988ல் அணு உலையைப் பற்றிக் கவலை கொண்டிராத,
அல்லது அறியாதிருந்த தமிழர்கள் இன்று
மறுத்தெழுந்திருக்கிறார்கள்.
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" அன்றோ?
இப்பொழுது கட்டிவிட்டார்களே என்ன செய்யலாம்?
தமிழகம் நெற்களஞ்சியம்தானே!
தென்னைமர உயர அண்டாக்களையும்
கும்பாக்களையும் கட்டியிருக்கும் கூடங்குள அணு உலையை
உலகத்திலேயே ஆகப்பெரிய அரிசி ஆலையாக மாற்றலாம்.
அதைத்தவிர வேறேதும் செய்ய முடியுமா என்பதை
அப்துல்கலாம், செயபாரதன் போன்ற தமிழக அறிவியல்
அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுத்தலாம்.
அணு மின்சாரத்திற்கு மாற்று பற்றியும் பிறவற்றையும்
தொடர்ச்சியில் காணுவோம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
4 comments:
நண்பர் அவர்களுக்கு வணக்கம் . தாங்கள் கட்டுரை வரைந்த விதம் மிக அருமை . ஆனால சொல்ல வந்த கருத்துகளில் நிறைய மாற்று கருத்துகள் எனக்கு உள்ளன .
// 1988லே துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை
இன்றைக்கு 23 ஆண்டுகளாகி பல்லயிரம் கோடிகளை
ஏப்பமிட்டுள்ளது. //
1988 ல் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் கையொப்பமிடப்பட்டது . ஆனால் சோவியத்து யூனியன் உடைந்து விட்ட காரணத்தினால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு 2002 ம் வருடம் தான் கட்டுவதற்கு துவங்கப்பட்டது என்பதை கொஞ்சம் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
// அரணவ இரகசியங்கள் போல,
இதன் செலவுகள் வெளியே சொல்லப்படுவதில்லை.//
உங்களுடைய இந்த கருத்து கொஞ்சம் வேடிக்கையாக தான் இருக்கிறது. பொதுவாக இந்த மாதிரி அரசு நிறுவனங்கள் , சில தனியார் நடத்துகிற மணல் கம்பனிகள் போல அல்ல . அவைகள் பல விதமான தணிக்கை குழுக்களால் தணிக்கை செய்யப்படுகிறது. எல்லாவடிர்க்கும் மேலாக CAG என்று சொல்லப்படுகிற தணிக்கை குழுவினால் ஆய்வு செய்யப்படும் . இப்படி இருக்க இந்த கணக்குகளில் என்ன ரகசியம் வேண்டி கிடக்கு ..?
// அமெரிக்காவின் நட்பிற்கு அதைப்போல
20 உலைகளுக்கான ஒப்பந்தங்களை
இந்தியா போட்டிருக்கிறது//
இது ஒரு தவறான தகவல் . இதுவரையிலும் எந்த ஒப்பந்தகளும் அமெரிக்காவிடம் அணு உலைகளுக்காக போடப்படவில்லை . ஆதாரம் இருந்தால்
காண்பியுங்கள் பார்க்கலாம் .
// இவ்வளவிற்கும் பின்னர்
இதன் உழைப்பு காலம் வெறும் 25 ஆண்டுகள்தான்.//
பொதுவாக அணுமின் நிலையங்களின் காலம் 40 ஆண்டுகள் . மேலும் 10 ஆண்டுகள் அவைகள் நீடிக்கப்படும் ( பரிசோதனைக்கு பிறகு ) . அப்படி இருந்தாலும் 50 ஆண்டுகள் தானே என்று கேள்வி கேட்பீர்கள் , இந்த 50 ஆண்டுகளின் மின்சார தேவையை நீங்கள் சந்திக்காவிடில் இந்தியா இன்னும் ஒரு 50 வருடங்கள் பின் தங்கிவிடும் என்பது தான் உண்மை . அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு பல மடங்கு இருப்பதினால் தான் அவற்றின் கட்டுமான செலவு அதிகம் என்பதயும் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் .
// அந்தச் சாணியைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எளிய
முறையை கிராமந் தோறும் நிறுவினால்
பல இலட்சம் கோடிகள் தேவையே இல்லை.//
நல்ல விடயம் தான் . இல்லையென்று சொல்லவில்லை . நீங்கள் சாணியை வைத்து எதனை MWe மின்சாரம் தயாரிக்க முடியும் . அரசு எல்லா வழிகளிலும் மின்சாரம் தயாரிக்கும் வழிகளை கைக்கொள்ளுகிறது. ஆனாலும் ஏன் அணுமின்சாரம் தேவை என்பதற்கு கொஞ்சம் இந்த தகவலை பாருங்கள் http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.html
//கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு
வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்களாம்
அப்போது. ஆனால், இது வரைக்கும் பத்தே பத்து
பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில்
வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகிக்கும் உதயகுமார் சொல்கிறார்.//
2002 க்கு முன் உள்ள கூடன்குளதையும் 2011 ம் வருட கூடன்குளதையும் கொஞ்சம் அந்த ஊருக்கு பொய் விசாரித்து பாருங்கள் . அங்கு இருக்கும் அத்தனை பேரும் அணுமின் நிலையத்தினால் பலனை அனுபவித்தார்கள் ( நேரடியாக / மறைமுகமாக ). ஒரு காரியம் சொன்னால் வேடிக்கையாக இருக்கும் உங்களுக்கு . அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த ஒருவர் அந்த சான்றிதழை பயன்படுத்தி 10 வருடங்கள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற்று தமிழக அரசு பணியில் சேர்ந்திருக்கிறார் . அவரும் அணுமின் நிலையம் வேண்டாம் என போராடுகிறாராம் .
// சப்பானின் புகுசிமா விபத்து இயற்கை சீற்றத்தால் வந்தது.//
புகுஷிமாவும் , கூடன்குளமும் ஒன்றா என்ற எனது இடுகையை காணுங்களேன் http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html
// இதைவிட, சப்பானில் 1993ல் ஒக்கைடோவில்
அடித்த சுனாமிப் பேரலையின் உயரமான அலை
32 மீட்டர் (100 அடி) எழுந்துள்ளது.//
ஏன் கூடன்ன்குலதிர்க்கு இந்த பாதிப்பு இல்லை என்பதற்கு http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html இடுகையின் பகுதிகளை பாருங்கள் .
//கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளில்
ஆகப் பெரியது அலாசுகாவில் 1958ல் நிகழ்ந்தது.
அதன் உயரம் 524 மீட்டர் (1720 அடி) என
பதிவாகியிருக்கிறது.
http://geology.com/records/biggest-tsunami.ஷ்த்ம்ல்//
நண்பரே .. நீங்கள் உணர்ச்சி வேகத்தில் இந்த மாதிரி தகவல்களை வெளியிடுகிறீர்கள் . நீங்கள் குறிப்பிட்ட அதே இடுகையை காணுங்கள் . அது சுனாமி அல்ல . சுனாமி போல அலைகள் எழுந்தன . ஏன் ... 30 . 6 மில்லியன் குபிக் மீட்டர் உள்ள ஒரு பெரிய பாறை 914 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததினால் அங்கே தண்ணீர் அப்படி எழுந்தது . இந்திய பெருங்கடலில் அப்படி நிகழுவதர்க்கு என்ன சாத்தியம் ..?
சில சங்ககால சம்பவங்களை சொல்லி உள்ளீர்கள் . எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை .
உங்களுடைய கட்டுரை உங்களின் வீணான பயத்தையும் , சந்தேகத்தையும் கொண்டு எழுதப்பட்டதே ஒழிய , வேறொன்றும் இல்லை என்பது எனது கருத்து .
நன்றி
Post a Comment