KILIYANUR ONLINE

Tuesday, 15 November 2011

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72 என்றால் வரிகள் எவ்வளவு?

பெட்ரோல் விலையில் 38 சதவீதம் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிக்கே செல்கிறது. பெட்ரோல் விலை ரூ. 68.64 ஆக இருந்தபோது வரியாக விதிக்கப்பட்ட தொகை ரூ. 26.22 ஆகும்.

கடந்த வாரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தியது. ஒரே ஆண்டில் ஐந்தாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் பெட்ரோல் விலை உயர்ந்தது. சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலை சுத்திகரித்து வரியில்லாமல் ரூ. 41.38-க்கு விற்பனை செய்யலாம் என்று எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில்லறை விற்பனை விலை சுங்கவரி, உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி ஆகியன சேர்க்கப்படுவதால் இறுதியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 72 வரை தர வேண்டியுள்ளது.
ரூ. 41.38 விலை இருந்தால் அதற்கு சுங்க வரி 2.5 சதவீதம் ரூ. 1.04 விதிக்கப்படுகிறது. இது தவிர சென்வாட் வரியாக லிட்டருக்கு ரூ. 6.35-ஐ மத்திய அரசு விதிக்கிறது. இது தவிர, உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ. 6-ம் சிறப்பு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ. 2-ம் விதிக்கப்படுகிறது.

கல்வி வரியாக ஒரு சதவீதம் சேர்க்கப்பட்டு லிட்டருக்கு ரூ. 14.78 வசூலிக்கப்படுகிறது. அடிப்படை விலையில் மாற்றம் இல்லையெனில் மத்திய அரசு வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி விதிப்பு மாறுதலுக்குள்பட்டது. இதனால் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. தில்லியில் மதிப்பு கூட்டு வரி 20 சதவீதம் அதாவது லிட்டருக்கு ரூ. 10.62 ஆக இருந்தது. லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டதால் இது ரூ. 11.44 ஆக உயர்ந்தது.

டீசல் விலையைப் பொறுத்தமட்டில் விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ. 7.66 மட்டுமே. தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இதில் சுங்கவரி ரூ. 2.06 , உற்பத்தி வரி ரூ. 4.84 ஆக உள்ளது. நெடுஞ்சாலை வரி ரூ. 2 வசூலிக்கப்படுகிறது.

மத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் டீசல், சமையல் எரிவாயு, கெரசின் ஆகியவற்றை உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு விற்பதால் தினசரி ரூ. 333 கோடி வருவாய் இழப்பை சந்திக்கின்றன.

டீசல் லிட்டருக்கு ரூ. 9.27-ம், மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ. 26.94-ம், சமையல் எரிவாயுவுக்கு சிலிண்டருக்கு ரூ. 260.50-ம் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோல் மீதான கட்டுப்பாடு நீக்கப்படும் முன்பு தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் வி லை ரூ. 51.43 ஆக இருந்தது. இப்போது லிட்டர் விலை ரூ. 63.70 ஆக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72 என்றால் வரிகள் மட்டும் 38 சதவீதமாக ரூ.27 வரை ஆகிறது.

No comments:

Followers