KILIYANUR ONLINE

Tuesday, 29 November 2011

உயிர்த் தெழுதல் சாத்தியமா?

(ரஹ்மத்ராஜகுமாரன்,செல்: 944344690)
உயிர்த்து எழுதல்
உயிர்த்து எழுதல் முதலில் மரணத்தைப் பற்றி சற்றுயோசிப்போம். காரணம் மரணம் என்பது பற்றிய விபரம் தெரிந்தால், அப்புறமா உயிர்த்தெழுதல் சாத்தியமா....? யோசிக்கவாவது முடியும்.

ஆக்ஸ்போர்டு அகராதி மிக எளிமையாக சொல்கிறது: மரணம் என்பது இறப்பதும் இறந்திருப்பதும். இறப்பவனைச் சுற்றி பக்கத்திலேயே இருப்பவர்களால் கூட சொல்ல முடியாது. இவன் இந்த கணம் இறந்துபோகிறான் என்று! ஏனெனில் இறப்பதற்கு சற்று முந்தைய கணம் வரை அவன் பார்க்கிறான். அவன் நினைவுகள் அவனுக்கு இருக்கிறது. மரணம் வந்ததும், ஜடப்பொருளான கட்டில் மேஜை மாதிரி அவனும் ஜடமாகிறான். அந்த கட்டில் மேலேயே...!

1968-ல் 22-வது உலக மருத்துவர்களின் மாநாட்டில் மரணம் விவரிக்கப்பட்டது. மரணம் என்பது நம் செல்களின் தனிப்பட்ட மரணங்களின் தொகுப்பு. ஆக்ஸிஜன் மறுக்கப்பட்ட நம் திசுக்கள் வெவ்வேறு சமயத்தில் செயல் இழக்கின்றன. இந்த செயலிழப்பிலிருந்து மீள முடியாதது தான் முக்கியம். அதைத் தவிர்க்க முடியாதது அதைவிட முக்கியம். என்ன தான் உயிர்ப்பிக்க முயன்றாலும் மீட்க முடியாத தன்மைதான் மரணம்.


ஆக விஞ்ஞானத்திற்கு மரணம் குறித்து ஒரு முழுமையான தகவல் ஏதும் தெரியாது. மரணத்தை தவிர்க்கவோ, மரணத்திலிருந்து மீளவோ முடியவே முடியாது என்பது தான் விஞ்ஞானத்தின் ஆய்வு கண்ட உண்மை.

மரணத்தைப் பற்றிய விஞ்ஞானத்தின் கொள்கை திரும்ப மீளவே முடியாது என்பது தான். ஆனால் திருக்குர்ஆனோ மரணத்திற்குப் பின் உயிர்த்தெழுதல் என்பது முடியும் என்பதாக பல ஆதார சம்பவங்களைக் குறிப்படுகிறது.

வாஸியத்தைச் சேர்ந்த ""தாவர்தான்'' எனும் கிராமத்து யூதர்கள் தொற்றுநோய்க்கு பயந்து ஊரைவிட்டு வெளியேறினர். வெளியேறிய மொத்த ஜனமும் ஒரு பெரிய வெட்டவெளிக்கு வந்தனர். அப்பொழுது அல்லாஹ் அக்கூட்டத்தாரை, நீங்கள் மரித்து விடுங்கள் என்று ஆணையிட்டான். அவர்கள் அனைவருமே இறந்துவிட்டனர்.

சில காலத்திற்குப் பின்னர் அவ்வழியாக வந்த நபி துல்கிப்லு (அலை) இறந்துகிடந்த சடலங்களைப் பார்த்து, அவர்கள் அனைவரையும் உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். கிருபையுள்ள ரஹ்மான் அவர்கள் உயிர் பெறச் செய்தான் எனத் திருக்குர்ஆனில்,


நபியே! மரண பயத்தால் தம் வீடுகளை விட்டும் ஆயிரக் கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்க வில்லையா...? அல்லாஹ் அவர்களிடம், இறந்துவிடுங்கள் என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்.

குர்ஆன் (2 : 243)

அடுத்து, அந்த கிராமத்தின் வீடுகளின் உச்சிகயளல்லாம் இடிந்து விழுந்து பாழடைந்து கிடந்தன; இதைப் பார்த்த உஜைர் நபி, இவ்வூர் இவ்வாறு அழிந்து மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்...? என்றார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவர்களை உயிர்பெற்றெழும்படிச் செய்தான்.... உம்முடைய கழுதையைப் பாரும்; அக்கழுதையின் எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின் மேல் சதையைப் போர்த்துகிறோம் எனக்கூறி அதனை உயிர் பெறச் செய்தான்.

குர்ஆன் (2:259)


அடுத்து, இன்னும் இப்ராஹீம்; என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக! எனக்கோரிய போது. அவன், நீர் இதை நம்பவில்லையா..? எனக் கேட்டான். மெய்யாக நம்புகிறேன். ஆனால் என் இதயம் அமைதி பெறும் பொருட்டே இவ்வாறு கேட்கிறேன். என்று கூறினார். அப்படியாயின் பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து (சேவல், மயில், புறா, காகம்) அவை உம்மிடம் திரும்பி வருமாறு பழக்கிக்கொள்! பின்னர் அவற்றை அறுத்து அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்துவிடும். பின் அவற்றைக் கூப்பிடும். அவை உம்மிடம் வேகமாய்ப் பறந்துவரும். குர்ஆன் (2 : 260)

அடுத்து, நபி ஈஸா (அலை) அவர்கள்: அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன் குர்ஆன் (3 :49) என்று கூறினார்கள்.

மரித்தவர்களை உயிர்ப்பிப்பதைக் குறித்து ஜனங்கள் ஹக்கீம் ஜாலினூஸை விசாரித்தார்கள். அதற்கு அவர் மரித்தவர்கள் சிகிச்சையைக் கொண்டு உயிர் பெறமாட்டார்கள். ஆகவே மரித்தவர்களை உயிர்ப்பிப்பாராயின் அவர் நபிதான் என்றார்.

நபி ஈஸா (அலை) ஆஜர் என்பவரை அடக்கம் செய்யப்பட்ட கப்ரில் சென்று துஆ செய்தார்கள். அவர் கப்ரிலிருந்து உயிர் பெற்று எழுந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களாகிய படியில் அவரது உடலிருந்து ஊண் வடிந்து கொண்டிருந்தது. பின்னர் அவர் சில காலம் வாழ்ந்து குழந்தைகளையும் பெற்றார்!


ஜனங்களுக்கு நபி ஈஸா (அலை) உயிர்ப்பித்தலில் சந்தேகம் வந்தது. இறந்தவர்கள் உண்மையில் இறக்காமல் ""ஸத்தா'' என்ற ஒரு வகை வியாதியினால் மரித்தவர்களைப் போல் இருக்கக்கூடும். எனவே ஆதிகாலத்தில் மரித்த நபி நூஹு (அலை) அவர்களது புதல்வர் ஸாம் என்பவரை உயிர்ப்பிக்க வேண்டினர். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் துஆ செய்ய, ஸாம் உயிர் பெற்று எழுந்தார். அங்கிருந்த ஜனங்களை நோக்கி, இவர் நபி; இவரை உண்மைப்படுத்துங்கள் என்று கூறினார். பின்னர் ஈஸா (அலை) அவர்கள் அவரை மரித்துவிடும்படிக் கூறினார்கள். அதற்கவர் தமக்கு மரணத்தின் சக்கராத்து திரும்பவும் வரக்கூடாதென்று கேட்டுக் கொண்டார். ஈஸா (அலை) துஆ செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒருவரை இஸ்லாத்திற்கு அழைக்கும்போது அம்மனிதர், இறந்துபோன தன் மகளை கப்ரிலிருந்து உயிர்ப்பிக்க வேண்டினார். நபி (ஸல்) அவர்களும் இறந்த அந்தப் பிணத்தை பெயர் சொல்லி அழைக்க, கப்ரிலிருந்து லப்பைக்க; வஸஹ்தைக்க என்று சப்தம் கேட்டு அல்லாஹ்வுடைய ரசூலே! அல்லாஹ் எனக்கு என் தாய் தந்தையர்களைப் பார்க்கிலும், மேலும் ஆகிரம், துன்யாவைப் பார்க்கிலும் இது கைராக இருக்கிறது என்று கூறினாள்.

இதைப்போன்று ஒரு பெரும் கவிஞர் ஒருவரை கப்ரிலிருந்து உயிர்ப்பித்து, கப்ரிலிருந்து கவிதை பாடிக்கொண்டு வரவழைத்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.

அடுத்து, நபி மூஸா (அலை) அவர்களுடைய காலத்தில் ஒருவர் கொலையுண்டு கிடக்க, கொலை செய்தவன் யார் என்று தெரியவில்லை. மக்கள் உண்மையான கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க நபி மூஸா (அலை) அவர்களிடம் முறையிடுகின்றனர். நபி மூஸா (அலை) இறைவனிடம் கேட்க, இறைவன் ஓர் உபாயத்தைக் கூறுகின்றான்.



அறுக்கப்பட்ட அந்தப் பசுவின் ஒரு துண்டால் அக்கொலையுண்டவனின் சடலத்தில் அடியுங்கள் என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் அத்தாட்சிகளையும் அவன் இவ்வாறு உங்களுக்குக் காட்டுகிறான்.

அல்குர்ஆன் (2 : 73)

கொலையுண்டவன் மீது மாட்டின் இறைச்சியால் (நாக்கு என்றும் விலா எலும்பு என்றும் ஒரு குறிப்பு காணப்படுகிறது) அடித்ததும் அவன் உயிர்த்தெழுந்து எனது சிற்றப்பன் மகன்கள் என் சொத்துக்களை அடைய வேண்டி என்னைக் கொலை செய்தனர் என்று கூறிவிட்டு மறுபடியும் இறந்து போனான்.

மனிதனின் உயிருக்கும் மாட்டின் இறைச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று இதுநாள் வரையிலும் தெரியவில்லை. நாளைய உலகம் இதைக் கண்டு சொல்லலாம்.

உயிர்த்தெழுதல் என்பது விஞ்ஞானத்தின் எல்லை மீறிய செயல். அரபுலகில் வந்த நபி (ஸல்) அவர்களை ஏற்காமல், ஆனால் அவர்களுக்கு இறங்கிய வேதமான குர்ஆனை நம்பினார்கள். இக்குர்ஆனைக் கொண்டு இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்ய முடியும் என்பதை முஸ்லிம் விரோதிகளான அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாமும், அப்துல்லா இப்னு உமைய்யாவும் உணர்ந்திருந்தனர். எனவேதான் நபி (ஸல்) அவர்களிடம், குறைஷிகளில் முந்தைய சமூகத்தவரான குஸ்ஸி இப்னு கிலாப்பை உயிர்ப்பிக்க வேண்டினர். அவரை உயிர்த் தெழுப்பியதும் அவரிடம் உம்மைப் பற்றிய உண்மை நிலை விசாரிக்க வேண்டும் என்றனர். உடனே அல்லாஹ் குர்ஆனில்,

நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்களைப் பேசும் படிச் செய்யப்பட்டாலும் (இவ்விரோதிகள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்).

குர்ஆன் (13 : 31)

இவ்வுலகில் ஆக்கப் பூர்வமாக குர்ஆனைப் பயன்படுத்தி மலைகளை நகர்த்தியோ, அல்லது அதே ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இந்த பூமியை துண்டு துண்டாக்கியோ, இதையயல்லாம்விட இக்குர்ஆனைக் கொண்டு இறந்தவர்களை உயிர்தெழச் செய்ய முடியும் என்றால்.... இவ்வுலகை வாட்டி வதைத்து மரணத்தின் நுனியில் கொண்டு நிறுத்தியிருக்கும் பயங்கரமான நோய்களான எய்ட்ஸ், கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தும் இப்புனித குர்ஆனில் இருந்தே ஆக வேண்டும் என்பதை அறிவார்ந்த இந்த உலகம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இக்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது கூட....


இன்னும் நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் படிப்படியாக இறக்கி வைத்தோம்; ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் இது அதிகமாக்குவதில்லை.

குர்ஆன் (17 : 82)

எனவே, இக்குர்ஆனை அறிவியல் பூர்வமாகவோ மருத்துவ ரீதியிலோ அணுக வேண்டும். உலகில் பலபாகங்களில் திருக்குர்ஆனின் மிக நுட்பங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இக்குர்ஆனைக் கொண்டு கொடிய நோய்களுக்கு மருந்து மட்டும் அல்ல; மரணித்தவர்களை அவசியப்பட்டால் உயிர்தெழுப்புதல் என்பது கூட சாத்தியமாகலாம்.

உயிர்த் தெழுதல் கூட இவ்வுலகில் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு குர்ஆனே அத்தாட்சியாகிறது.

தக்கலை ஞான மாமேதை பீர் முஹம்மது அப்பா (ரஹ்) அவர்கள் செய்து காட்டிய அற்புமான, முத்துசாமி தீட்சரின் மகளை உயிர்த்தெழுப்பிய வரலாறும் இங்கு சாட்சியாகிறது.




பெருமை யார் உரிமை?



மேலும் (ஷைத்தான்) பெருமையடித்தான். அவன் காபிர்களில் (ஒருவன்) ஆகிவிட்டான்.

ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் இட்ட கட்டளையைக் கேட்காமல், தன் பெருமை பேசிய ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

மலக்குகளின் ஆசிரியராயிருந்த ""அஜாஜீல்'' இறை கோபத்திற்கு இலக்காகி ""இப்லீஸ்'' ஆனதற்கான காரணம் அவன் பெருமையடித்ததுதான்!

பெருமை என்ற சொல் பெரு - பெரிது - பெரிய என்னும் செல்லில் இருந்து பிறந்தது. அதாவது, பெரிதாக தன்னைக் காட்டுவதுதான் பெருமை. அதற்கு எதிர்மறைச் சொல் சிறுமை.

பெருமை எனும் மலையுச்சியில் ஏறியவன் தவறிக் கீழே விழும்போது சிறுமை எனும் அடிவாரத்தில் விழுந்து நொறுங்கிப் போகிறான்.

""அல்கிப்ரு ரிதாயீ'' பெருமை எனது போர்வை (பொன்னாடை) என அல்லாஹ் கூறுவதாக ஹதீஸ் குத்ஸீ பகர்கிறது.

கண்ணியத்தின் - மேன்மையின் அடையாளமாக போர்த்தப்படும் போர்வை மகா மேலானவனான அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. பெருமை என்பது தனக்கு மட்டுமே உரியது என இறைவன் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்குச் சொந்தமான ஒன்றை, அதற்கு சற்றும் தகுதியில்லாத மனிதன் எடுத்து அணியும் போது சிறுமைப்பட்டுப் போகிறான்.

உதாரணமாக, செல்வச் சீமானான முதலாளியின் ஆசனம் ஒன்றின்மீது, அவரிடம் கைகட்டி சேவகச் செய்யும் தொழிலாளி அமர்ந்தால் என்ன நடக்கும்? கழுத்தைப் பிடித்து அவன் வெளியே தள்ளப்படுவான்.

ஓர் அழகான கோட்- சூட் இருக்கிறது.

அதை பிச்சைக்காரன் ஒருவன் எடுத்து அணிந்து, கையில் பாத்திரமேந்தி தெருவில் நடந்து சென்றால் எவ்வளவு கேவலமாக இருக்கும்?



நபிமார்கள், வலிமார்கள், இறைநேசர்கள் ஏன் பெருமை பேசுவதில்லை?

நாமெல்லாம் எங்கோ வைத்து எண்ணுகின்ற இறைவனை அவர்கள் தம்மைச் சுற்றி எங்கும் காணுகின்றார்கள். அல்லாஹ்வின் எதிரிலேயே எப்போதும் இருப்பதாக எண்ணுகிறார்கள். சர்வ பெருமைகளுக்கும் உரியவனுக்கு முன்னே அவர்கள் நாணிக் கோணி நிற்கிறார்கள்.

கற்றறிந்த மேதைக்குமுன் பாமரன் வாய் திறக்கப் பயப்படுவதுபோல அவர்கள் பயப்படுகின்றார்கள். சூரியனுக்கு முன்னால் சீரியல் லைட் விளக்கு மினுக்மினுக்கென்று பயந்து எரிவதுபோல அவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

பொம்மலாட்டத்தில் ஆடிய பொம்மையைப் பார்த்து ஆஹா! என்னஅழகாக ஆடினாய்! எனப் புகழ்ந்து பேசும் ஒருவனிடம், ""உஸ் - சப்தமிட்டுப் பேசாதே! என்னைப் புகழாதே! என் ஆட்டத்திற்கெல்லாம் காரணம் நானா? என்னை ஆட்டுவித்த கலைஞனல்லவா? நீ பேசுவதை அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்'' என இடித்துரைப்பது போல, இறைநேசர்களைப் புகழும் மனிதர்களை அவர்கள் இடித்துரைக்கின்றார்கள்.

பெருமை எனும் இறைவனின் உடமைமீது கை வைக்கப் பயப்படுகிறார்கள்.

உண்மையில் மனிதன் பெருமைக்குரியவனா? என சிந்தித்தால் அவனது கீழ்நிலை - அற்ப நிலை - அதற்கு உரியதாக இல்லை.

உடலும் இரவல் - உடையும் இரவல். உயிரும் நிலையற்றது - வாழ்வும் நிரந்தரமற்றது.

இதில் அவன் பெருமையடிக்க என்ன இருக்கிறது? பில்கேட்சின் சொத்துக்கு ஒருவன் உரிமை கொண்டாடினால் அவனைப் பைத்தியம் என்று உலகம் இழித்துப் பேசுமாப்போல தன்னிடம் இல்லாத ஒன்றுக்கு தன்னைத் தகுதியாக நினைப்பதும் பழிப்புக்குரியதுதான்.

அடிப்படையில் ஒரே பொருளாயிருக்கும் நூரே முஹம்மதிய்யாவை அறியாமல்; நெருப்பு - மண் என்றெல்லாம் ஷைத்தான் பிரித்துப் பேசி இறைவனிடமே வாதாடி சாபத்துக்கு ஆளானான்.

பிரிக்கும்போது தான் பெருமை ஏற்படுகிறது. பெருமைக்கு ""இரண்டு'' தேவைப்படுகிறது. சிறியது இருந்தால் தானே பெரியது தெரியவரும். ஆனால் ஒன்றாகிவிடும்போது சிறிதும் இல்லை, பெரிதும் இல்லை, அந்த இரண்டுமற்ற நிலைதான் உண்மையில் பெருமைக்குரியது.

1 comment:

ஓசூர் ராஜன் said...

உயிர்த்தெழுதல் என்பது என்னைப் பொறுத்தவரை சாத்தியம் அற்றது! சோம்பி இருக்கும் மனமோ,உடலோ சுறுசுறுப்பு அடைந்தால் அதுவும் உயிர்த்தெழுதல் தான்! இறந்துவிட்ட பின் அதுசாத்தியமில்லை!

Followers