KILIYANUR ONLINE

Wednesday, 30 November 2011

அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்

சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும்.

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்துக் கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நிலைப்பாட்டுக்கு எதிராக பல நாடுகள் அணிதிரண்டன. அமெரிக்க நிலைப் பாட்டுக்கு மிகக் குறைந்த ஆதரவே கிடைத்தது. இது மற்றுமொரு அடியாகும்.

அமெரிக்காவின் துதிபாடிகளில் ஒருவரான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஐக்கிய நாட்டு உரையில் அமெரிக்காவை வாங்கு வாங்கு என வாங்கியுள்ளார். பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஆப்கான், ஈராக், லிபியா விவகாரத்திலும் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது மற்றுமொரு அடியாகும்.

இதே நேரத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் துவங்கிய போது அதற்குத் தோள் கொடுத்து துணையாக நின்றது பாகிஸ்தான் ஆகும்.

அமெரிக்காவுக்கு உதவவில்லையானால் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷர்ரப் தனது கோழைத் தனத்தை வெளியிட்டார்.

அமெரிக்கா பாகிஸ்தானில் தன்னிச்சையாக எடுத்த பல நடவடிக்கையால் பாகிஸ்தான் அமெரிக்காவை நோக்கிக் கைவீசிப் பேசும் நிலை ஏற்பட்டு இன்று அது முற்றி முறுகல் நிலைக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செயற்படும் ஹக்கானி நெட்வேர்க் என்ற பெயரில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களை வளர்த்து விடுவதே பாகிஸ்தான் தான் என அமெரிக்க இராணுவத் தளபதி மேக் முல்லன் கருத்துத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஹக்கானி அமைப்பிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தொடர்ந்து உதவி வருகின்றது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி இதற்கு அளித்த பதில் நெற்றியடியாக அமைந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்த போது ஹக்கானி நெட்வேர்க்கை வளர்ந்துவிட்டது. பாகிஸ்தானா? அமெரிக்காவா? எனக் கேட்டு ஹக்கானி அமைப்பை வளர்த்தது அமெரிக்காவே என குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் பொறுமையை அமெரிக்கா அளவுக்கு மீறி சோதித்துப் பார்க்கின்றது. மீண்டும் மீண்டும் சீண்டினால் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வோம் என அமெரிக்காவையே மிரட்டியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானின் உறவை அமெரிக்கா முறித்துக் கொண்டால் பாகிஸ்தானுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்காவே பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்தப் பதிலை அமெரிக்கா அணுவளவும் எதிர்பார்த்திருக்காது.

இவர் புதிய ஒரு அமைச்சர். ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பது போல் என்னவோ ஆர்வக் கோளாரில் உளறுகின்றார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். இவரின் இந்த முகத்திலடித்தால் போல் அமைந்த பதில் குறித்து அமெரிக்கா எந்தப் பதிலும் கூறவில்லை. பெறும்பாலும் பாகிஸ்தானின் உயர்மட்ட அரசில் தலைவர்களே இதற்குப் பதில் கூறி பணிந்து வருவார்கள் என அமெரிக்கா எதிர்பார்த்திருக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் பாகிஸ்தானிலிருந்து பளார் என மற்றொரு அறை அமெரிக்காவின் கண்ணத்தில் விழுந்தது.

இந்த சூழ்நிலையில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவிற்குப் பெருத்த தலையிடியாக மாறியுள்ளது. அமெரிக்கா தான் உலக வல்லரசு என்ற நிலை நீடிப்பதால் தான் உலக நாடுகள் அதன் கீழ் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ரஷ்யா இருந்த இடத்தை சீனா எட்டிவிட்டால் சீனாவின் பக்கம் சில நாடுகள் நகர்ந்து சென்று விடும். என்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற அமெரிக்காவின் ஆணவத்திற்கு இது பலத்த அடியாக அமையும். அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையில் பணிப்போர் நடைபெறுவது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.

அமெரிக்காவுக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் பேசுகிறார். இதே வேளை சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மொங் கியாங் ஜு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றார். அவரை வரவேற்பதற்கான நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உரையாற்றும் போது ‘சீன நட்பு மலைகளை விட உயரமானது, கடலை விட ஆழமானது, இரும்பை விட வலுவானது, தேனை விட இனிமையானது’ என காதல் கீதம் பாடியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலின் நண்பனாகத் திகழ்ந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ‘சீனாவின் நண்பர்கள் எமக்கும் நண்பர்கள். சீனாவின் எதிரிகள் எமக்கும் எதிரிகள்’ என போட்ட போடு அமெரிக்காவிற்று மற்றுமொறு அவமான அடியாகும்.

சீனாவும் இந்தியாவும் கீரியும்-பாம்புமாகவுமே செயற்பட்டு வருகின்றன. இதே உறவு தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீடிக்கின்றது. எனவே, பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இது அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியில் விழும் பலத்த அடியாகும்.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவை எதிர்க்கிறார். பாகிஸ்தானும் அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு வந்துள்ளது. சீனா-இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் இந்த நாடுகள் தமக்கிடையிலுள்ள பகையை மறந்து ஒன்று பட்டால் தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க ஆதிக்கக் கழுகைத் துரத்திவிடலாம்.

இந்த நாடுகளில் வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்புணர்வு அமெரிக்காவுக்குப் பலத்த பின்னடைவாக இருந்தாலும் இந்த நாடுகளுக்கு உள்ளேயே நிலையான நீடிக்கும் பகையுணர்வுதான் அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே பலமாகும். இந்த பலத்தை சிதறடித்தால் தெற்காசிப் பிராந்தியம் சீர்பெறும்ளூ வளம் பெறும்ளூ நிம்மதி பெறும்.

இலங்கை உண்மை உதயம் மாதஇதழிலிருந்து...

Followers