KILIYANUR ONLINE

Thursday, 2 February 2012

மஹல்லா தோறும் மீலாதுந் நபி விழா நடத்துவோம் கே.எம்.கே.

வருகிற பிப்ரவரி திங்கள் 5-ஆம் தேதியன்று, ரபியுல் அவ்வல் 12-ஆம் நாள் வருகிறது; வானோருக்கும் மண்ணோருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து சிறந்த வள்ளல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினமும் அன்றுதான் வருகிறது.

அன்றைய தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்வர். கல்விக் கூடங்கள் அன்று விடுமுறை ஆகின்றன. மற்றபடி மக்கள் மத்தியில், வணிகத்தலங்களில், சாலைகளில், தெருக்களில் எவ்வித மாற்றம் இல்லாமல் வழக்கம்போல காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

முந்தைய காலங்களில் ரபியுல் அவ்வல் பிறை பிறந்த நாள் முதல் பள்ளிவாசல்களில் நபி வரலாறு - போதனைகள் பற்றிய சொற்பொழிவுகள் தொடர்ந்து பன்னிரண்டு நாட்களும் நடக்கும். தர்காக்களில் மீலாதுந்நபி விழா களை கட்டும். பள்ளிக் கூடம், கல்லூரிகளில் மீலாதுந் நபி விழாக்கள் நடைபெறும். எல்லா ஊர்களிலும், நகரங்களிலும், மாநகரங்களிலும் மீலாதுவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். இஸ்லாமிய அறிஞர்கள், சகோதர சமுதாய சமயச் சான்றோர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நபி பிறந்த நாள் விழாவில் பங்கேற்பர். இஸ்லாமிய போதனைகளை எல்லாச் சமுதாயத்தவரும் கேட்டுப் பயன் பெறும் வகையில் அந்தச் சொற்பொழிவுகள் அமைந்திருக்கும் தமிழகத்தில் மக்கள் போற்றும் சமூக நல்லிணக்க விழாவாக மீலாதுந் நபி விழாக்கள் நடைபெற்று வந்தன.

ஆனால், இன்றைக்கு அத்தகைய விழாக்கள் மிகவும் குறைந்து விட்டன. அதற்கு மாறாக ஊடகங்களில் இஸ்லாமிய பிரச்சாரம் என்னும் பெயரில் குதர்க்கங்கள் பேசப்படுகின்றன; குழப்பங்கள் பரப்பப்படுகின்றன; கொள்கைக் கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நபி வரலாறு பேசப்படும் போது உள்ளத் தூய்மை பெறுவதோடு உடலும், ஊரும் தூய்மை பெற்று வந்தது. தெருவெல்லாம் சுத்தம் செய்து நீர் தெளித்து விழாக்கோலம் காணப்பட்டது அந்தக் காலம்!

நபிகள் பெருமானார் (ஸல்-அம்) அவர்களுக்கு பிறந்த நாள் விழா நடத்துவது தேவையில்லாத புதுமை என்று ஒதுக்குவது இந்தக் காலம்! அல்லாஹ்வைப் பற்றிய அச்சமும், அண்ணல் முஹம்மது (ஸல்-அம்) அவர்கள் பற்றிய அறிவும், இஸ்லாம் பற்றிய தெளிவும், முஸ்லிம் என்றால் யார் என்னும் ஞானமும் மீலாது விழாக்கள் மூலம் பரப்பப்பட்டது அந்தக் காலம்!

இஸ்லாமிய போதனை என்னும் பெயரில் ஊடகச் சண்டை களால் இஸ்லாம் பற்றிய வெறுப்பையும், முஸ்லிம் பற்றி அருவெருப்பையும், இஸ்லாமிய கொள்கை பற்றி விரோதத்தை யும் ஏற்படுத்துவது இந்தக் காலம்!

அனைவரையும் - எல்லா சமுதாயத்தவரையும் அரவணைப் பதற்காக அன்று நடத்தப்பட்டது மீலாது விழா.

`எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்! இல்லாத எளிய மக்களுக்கு வழங்கி வாழ்வோம்! எல்லாத் தரப்பு மக்களுடனும் இணங்கி வாழ்வோம்! என்னும் தத்துவத் தேனாறுக்கு மீலாது விழா வடிகாலாக வாய்க்காலாக இருந்தது!

இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி! - என்னும் தத்துவத்திற்கு விளக்கங் கூட்டங்களாக மீலாது விழாக்கள் அமைந்தன.

வன்முறைக்குத் துணியவும் கூடாது; - வன்முறைக்கு பணியவும் கூடாது என்னும் முழக்கத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மீலாது விழாக்கள் நடைபெற்றன.

அல்லாஹ்வைத் தவிர யார்க்கும் அஞ்சிடாதீர். அண்ணல் நபி வழியில் அணிவகுத்து சென்றிடுவீர்! என்பதற்குக் கட்டியம் கூறும் விழாவாக மீலாது விழா நடந்தது.

மஸ்ஜிதுகள் - இறையில்லங்கள் புதுப்பொலிவு பெற்றன. பழையன கழிந்து, புதியன மஸ்ஜிது கட்டடங்களில் புகுந்து எழில் கூட்டின. ஊர் உறவினர் முறை ஜமாஅத்துகளின் ஒற்றுமைக் கொடி அங்கே பறந்தது. மார்க்க அறிஞர்களுக்கு மகத்துவம் கிடைத்தது. ஏழை எளிய மக்கள் - விதவைகள் - ஆதரவற்ற முதியவர்கள் பன்னிரண்டு நாட்கள் நபியின் பெயரால் நல்ல உணவை வயிறார உண்டு மகிழ்ந்தனர். ஏழைக்குமர் காரியங்களை நிறைவேற்றுவதற்கு ஊர் ஜமாஅத் துகள் பேருதவி புரிந்தன. இத்தனையும் நடந்திட மீலாது விழா நடந்தது. ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் என்ன நிலை?

மார்க்க அறிஞர்களுக்கு - உலமாக்களுக்கு உரிய உன்னத இடம் இருக்கிறதா?
மஹல்லா ஜமாஅத் - ஊர் ஜமாஅத் ஒற்றுமை நிலையாக இருக்கிறதா?
மஸ்ஜிது நிர்வாகங்களில் குழப்பம் இல்லாமல் தொடர்கிறதா?
ஊர் ஜமாஅத் மக்களின் குடும்பப் பிரச்சினைகளை ஷரீஅத் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பதற்கு முடிகிறதா?

இதுபோன்ற வினாக்களும் இன்னும் பல விபரீதமான வினாக்களும் இன்றைக்குச் சமுதாயத்தில் எழுந்த வண்ணம் உள்ளன.

நபி விழாவை முதலில் நடத்துவோம்! மஸ்ஜிதுகளிலும், மஹல்லாக்களிலும், இல்லங்களிலும் ஸலவாத் என்னும் நபிவாழ்த்தை நாள் தோறும் கூறுவோம்! ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

No comments:

Followers